அட்டக்கத்தி - நவீன காதலின் டிக்ஸ்னரி..

Monday, August 27, 2012

காதல் தோல்வியின் பரிணாம வளர்ச்சி எந்த அளவுக்கு இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை ”அட்டக்கத்தி” படத்தில் மிகவும் நக்கலாக அணுகியிருக்கிறார்கள். உயிரை விடும் நாயகன், தாடி வளர்ப்பவன், தண்ணி அடிப்பவன், சிகரெட் குடித்து சூடு போட்டுக்கொள்பவன், காதலியை கொன்று தானும் செத்துவிடும் நாயகர்களை பார்த்திருக்கும் நமக்கு “இன்னைக்கு தேதில காதலும் கிடையாது, தோல்வியும் கிடையாது” என்று மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
நீங்கள் படிக்கும் காலத்தில் ஏதோ ஒரு பெண்ணை பார்த்து (பல பெண்களாகவும் இருக்கலாம்) மனதுக்குள் ஒரு மாதிரி குறு குறு என்று இருப்பதை காதல் என நினைத்து அவள் பின் அலைந்து, அவள் உங்களை கண்டுகொள்ளாமலே அலையவைத்து, நீங்களும் மிகவும் சோகமா இருக்க ட்ரை பண்ணி, அது ஒரு லவ்வுன்னு அதுக்கு ஃபீல் ஆகி,  பாஸ் பண்ணி டிகிரி வாங்குவதை விட ‘லவ் ஃபெயிலியர்’ என்னும் பட்டம் கிடைப்பதை பெருமையாக நினைத்துக்கொண்டிருந்த காலம் ஒன்று இருக்கும்ல? அதை அப்படியே உங்ககிட்ட உங்க ஊர் தகுதிக்கேற்ப 40 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை வாங்கிட்டு ஸ்க்ரீன்ல படம் போட்டு காட்டுறது தான் “அட்டக்கத்தி”.. படத்தின் இடைவேளை வரை அந்த தீனா என்னும் கதாநாயகனின் பாத்திரத்தில் என்னையும் எனது பல பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களையும் பார்த்தேன்..



கதைன்னு ஒன்னும் பெருசா இல்ல.. ஹீரோ லவ் பண்ணுறான், பல்ப் வாங்குறான், ஃபீல் பண்ணுறான்.. திரும்பவும் லவ் பண்ணுறான், பல்ப் வாங்குறான் ஃபீல் பண்ணுறான்.. கடைசி ஒரு சீன் மட்டும் தான் அவன் லவ் பண்ணல.. ஆனா அதுலயும் பல்ப் வாங்குறான்.. இது தான் மொத்த படமும்.. கேக்க ஒரு மாதிரி இருந்தாலும், எடுத்திருக்கும் விதம் ரசிக்கும் படியாகவே இருக்கிறது.. தினகரன் @ தீனா @ அட்டக்கத்தி @ ரூட் தல யாக நடித்திருக்கும் தினேஷ் அபாரம்.. அந்த உடல்மொழி, ஒவ்வொரு முறை பல்ப் வாங்கும் போதும் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் எல்லாமே சூப்பர்.. அவரின் உடல்மொழியில் ஒன்றையாவது படிக்கும் காலத்தில் நாம் செய்திருப்போம்.. கராத்தே மாஸ்டரிடம் ஊமைக்குத்து வாங்கி புலம்பிக்கொண்டே வரும் போது, நண்பர்கள் “டேய் அவ வராடா” என்றதும் ‘டக்’கென்று முகத்தை துடைத்து ஈஈ என்று இளித்தவாறு திரும்பும் ஒரு சீன் போதும் இவரின் நடிப்பையும் பாத்திரப்படைப்பையும் சொல்ல..

கதாநாயகி பூர்ணிமாவாக நந்திதா.. பார்ப்பதற்கு ஒரு ஜாடையில் ஈரம் படத்தில் நடித்த சிந்துமேனன் போல் இருக்கிறார்.. நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். அட்டக்கத்தி அவரிடம் காதலை சொல்ல பின் தொடரும் போது “அண்ணா” என்பதும், கல்லூரியில் வாலண்டியராக பழகுவதும், கடைசியில் வழக்கம் போல பல்பு கொடுப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது. இரண்டாம் பாதியில் இவர் எப்படியும் அட்டக்கத்தியை லவ் பண்ண மாட்டார் என்பதை எளிதாக யூகிக்க முடிவதால் அந்த கடைசி பேருந்து காட்சியில் அப்படி ஒன்றும் சுவாரசியம் இல்லை.. இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்..

படத்தின் பல இடங்களில் கானா பாடல்களை சேர்த்திருப்பது புதுமையாக இருக்கிறது.. ‘ஒரு தலை ராகம்’ பார்த்து விட்டு பேருந்தில் ஹீரோ சலம்புவது கானாவை விட டாப்டக்கர்.. சென்னை பக்கம் கிராமமும் இருக்கும் என்பது இந்தப் படம் பார்க்கும் போது தான் எனக்கு தெரிகிறது. கிராம மக்கள் எல்லா ஊரிலும் ஒரே மாதிரியாக, மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாத கோவமும் நக்கலும் நிறைந்த நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.



அட்டக்கத்தியின் அப்பா & அம்மா பாத்திரங்களும் நம்மைக் கவர்கின்றன.. “நைனா உன் ஜட்டினு தெரியாம கரித்துணிக்கு எடுத்துட்டேன், அப்பா ஜட்டிய வாங்கி போட்டுக்கோ” என்று சொல்லும் தாயும், “டேய் நாங்க வீரப்பரம்பரடா” என்று தண்ணி அடித்துவிட்டு தினமும் யாருக்கோ சவால் விடும் அப்பாவும் கொஞ்சம் புதுசு தான்..

அன்றாடம் நண்பர்களுடன் நாம் பேசுவதை வசனமாகவும், தேர்ந்த ஒளிப்பதிவும், நல்ல பின்னணி இசையும் படத்தை இன்னும் கொஞ்சம் தூக்கி நிறுத்துகின்றன.. மொத்தத்தில் அட்டக்கத்தி, இன்றைய இளசுகள் பலவும் (என்னையும் சேர்த்து தான்) காதல் என்றால் என்னவென்றே சரியாக புரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத்தனமாக ஒரு பெண் பார்ப்பதையும் பேசுவதையும் பழகுவதையும் காதலாக புரிந்து கொள்ளும் ஆண்களை பகடி செய்யும் சிறந்த பொழுது போக்கு திரைப்படம். நீங்கள் சிறு வயதில் காதல் என்ற பெயரில் செய்த கிறுக்குத்தனங்களில் ஒன்றையாவது இந்தப்படத்தில் பார்ப்பீர்கள்.



எனக்கு மிகப்பிடித்த காட்சி - ஹீரோ காதலிக்கு ரத்தத்தால் லெட்டர் எழுதுவதும், அதற்கு வார்த்தைகளை காதலுக்கு மரியாதை பாடல் புத்தகத்தில் தேடுவதும், பின்னணியில் ‘மெல்லினமே மெல்லினமே’ பாடல் இசைத்துக்கொண்டிருப்பதும் நவீன காதலில் இயல்பை மீறிய சினிமாத்தனமும் செயற்கையும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.. அதே காட்சியில் சாராயம் குடித்துவிட்டு சாப்பிட முடியாமல் இருக்கும் அப்பாவுக்கு அம்மா சோறு ஊட்டி விடுவார். எனக்கு தெரிந்து டைரக்டர் இந்தப்படம் மூலம் சொல்ல வரும் கருத்து இது தான்..

1 comment

  1. அருமையான விமர்சனம். நேரம் கிடைக்கும் போது படம் பார்த்துவிட்டு சொல்கிறேன் நண்பா.

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One