Pages

Thursday, July 29, 2010

எந்திரன் ஆடியோ வெளியீடு விளம்பரமும் ஆனந்த விகடனின் இலவச இணைப்பும்...


இன்று என்னை இரண்டு புதுமையான விஷயங்கள் என் கவனத்தை ஈர்த்தன.. ஒன்று இன்றைய நாளிதழ்களில் வந்த எந்திரன் பட விளம்பரமும், ஆனந்த விகடனில் வந்த இலவச இணைப்பும்..
முதலில் தலைவரைப்பற்றி பார்ப்போம்..

வழக்கமாக ஒரு படத்தின் விளம்பரத்தில் அந்த படத்தின் சில புகைப்படங்களோ படத்தின் கலைஞர்களின் புகைப்படமோ இருக்கும்.. மேலும் அந்த படத்தின் பெயரும், இயக்குனர், மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களின் பெயரும் இடம் பெரும்.. விஜய்க்காக படம் பார்க்காவிட்டாலும் தமன்னா அனுஷ்கா அல்லது வடிவேலு போன்றோர்களுக்காகவாவது படம் பார்க்க செல்வோம்.. அதனால் இப்படி பலரின் பெயரும் படமும் விளம்பரத்தில் இருக்கும்.

அதுவும் பாடல் வெளியீட்டு விளம்பரம் என்றால் பாடலாசிரியரின் பெயர், இசை அமைப்பாளர் பெயராவது இடம் பெரும். இன்றைய எந்திரன் விளம்பரத்தில் ஒன்றும் கிடையாது. ஏ.ஆர்.ரகுமான் பெயர் கூட இல்லை. படத்தின் பெயரும் இல்லை.. தலைவரின் முகம் மட்டும் தான். மேலும் "இசை வெளியீடு 31.07.2010" என்ற வாசகம் மட்டும். வேறு ஒன்றும் கிடையாது. இதில் இருந்து அவர்கள் சொல்லவருவது, தலைவர் இருக்கிறார், இது தலைவரின் படம் என்ற ஒன்று மட்டுமே. வேறு எதுவும் தேவை இல்லை; அது ஷங்கராக இருந்தாலும் சரி, ரகுமானாக இருந்தாலும் சரி. அவர்களின் இந்த விளம்பர அணுகுமுறை முறை என்னை மிகவும் கவர்ந்தது. தலைவருக்கு இருக்கும் மாஸ் இன்னும் பிரம்மாண்டமாய் தெரிகிறது...

அடுத்த விஷயத்திற்கு வருவோம்.. வழக்கமாக ஆனந்த விகடனில் இலவச இணைப்பு என்று சோப்போ, ஷாம்புவோ, டீ தூள் பாக்கட்டோ கொடுப்பார்கள். பெரும்பாலும் நான் உபயோகப்படுத்தும் சோப்போ, ஷாம்புவோ வராது, டீ தூளை மட்டும் பயன் படுத்துவேன்.. சோப்பை பக்கத்து வீட்டில் கொடுத்து விடுவேன். அவர்கள் கொடுத்த ஏர்செல் சிம் கார்டை கூட தேவை இல்லை என்று கீழே போட்டுவிட்டேன். இன்று அவர்கள் கொடுத்த இலவச இணைப்பை பார்த்தவுடன் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனந்த விகடனை குடும்பஸ்தர்கள் மட்டும் தான் படிப்பார்களா? மணமாகாத ஆண்கள் எல்லாம் ஆனந்த விகடனே படிக்க மாட்டார்களா? அவர்கள் தந்த இலவச இணைப்பை என்ன செய்வது? என்னை போன்ற ஒரு பாச்சுலர் இதை பக்கத்து வீட்டில் கொடுத்தாலும் செருப்படி தான் விழும். கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், இப்படி எல்லாம் இலவசமாக அவர்கள் செய்தால் தான் மக்களிடமும் ஒரு விழிப்புணர்வு வரும் என்று நினைத்துக்கொண்டேன்.

அப்படி அவர்கள் என்ன தான் கொடுத்தார்கள் என்கிறீர்களா? சானிட்டரி நாப்கின்.. நல்ல விளம்பர உக்தி தான்.. இதனால் சிலரிடம் விழிப்புணர்வும் வரும்.. ஆனால் இதையே சாக்காக வைத்துக்கொண்டு காண்டம்களையும் இலவசமாக கொடுக்காமல் இருப்பார்கள் என்று நம்புவோம்..

Sunday, July 11, 2010

மதராசப்பட்டினம்.......



இந்தியாவிற்கு கிடைக்கும் சுதந்திரத்தால் பாதிக்கப்பட்டு பிரிந்த காதல் நெஞ்சங்கள் மீண்டும் உயிரால் இணைவதே இப்படம்...

கிரீடம், பொய் சொல்லப்போறோம் என்ற இரண்டு தரமான வித்தியாசமான ரீமேக் படங்களை தந்த விஜய்யின் (இது நீங்க நெனைக்குற அந்த ரீமேக் விஜய் இல்ல, தரம் வித்தியாசம் என்ற இரண்டு வார்த்தைகளை மீண்டும் கவனிக்கவும்) அழுத்தமான சொந்த சரக்கு. 'மனுஷன் ஏன்யா இவ்வளவு விஷயத்த வச்சுக்கிட்டு ரீமேக் படம் எடுத்தான்?' என்று என்னும் அளவிற்கு பிரித்து மேயந்துள்ளார்.. சுஜாதாவின் "ரத்தம் ஒரே நிறம்" நாவலின் சாயல் மிக குறைந்த அளவிலாவது தென் படுகிறது...

பலரும் சொல்வது போல் இது டைட்டானிக் போன்ற சாயலில் இருந்தாலும், முற்றிலும் வேறுபட்ட களத்தில் காதலை அழகாக சொல்லியிருக்கிறார்கள்..
படத்தின் பலமே காட்சி அமைப்பும், ஒளிப்பதிவும், கலை இயக்கமும் தான்.. சென்னை என்ற குப்பை மேட்டில் நான்கு மாதங்கள் இருந்த அனுபவத்தில் சில பல இடங்கள் தெரிந்த எனக்கே பழைய மதராசப்பட்டினத்தை பார்க்கும் போது அவ்வளவு ஏக்கமாக இருக்கிறது. இன்றைய கூவம் நதிக்கருகில் நின்று கொண்டு கதாநாயகி பழைய கூவத்தை நினைத்துப்பார்ப்பது "same feelings" என்று சொல்ல தோன்றியது..

படத்தைப்பற்றி விமர்சிக்கவோ குறை சொல்லவோ என்னிடம் எதுவும் இல்லை.. அப்படியே இருந்தாலும் சொல்லப்போவதில்லை.. நிறைகள் மட்டுமே..

*முதலில் சொல்ல வேண்டியது எமி ஜாக்சனை பற்றி.. பொண்ணு அழகுல மட்டும் இல்ல நடிப்புலயும் பிரிச்சு மேயிது.. ஒரு பேட்டியில் இயக்குனர் விஜய் சொல்லியிருந்தார், "தமன்னாவிற்கும் எமி ஜாக்ஸனுக்கும் என்னங்க வித்தியாசம்? ரெண்டுபேருக்குமே தமிழ் தெரியாது.. தமன்னாவே நடிக்கும் போது இந்த பொண்ணும் நடிக்கும்" என்று.. அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை.. நான் தான் எமி ஜாக்சன் சிவகாசி ரசிகர் மன்ற தலைவர்.

*முதல் பாதியில் ஆர்யா படகில் திக்கித்திணறி ஆங்கிலம் பேசும் போது, "மறந்துட்டியா?" என்று எமி கேட்கும் இடம், நச்.. அதே போல் அந்த குஸ்தி காட்சி அதில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும் வசனம், "நானூறு வருசத்துக்கு அப்பறம் திரும்ப அடிக்குறோம்"..

*இரண்டாம் பாதி முழுவதும் அருமை. அதுவும் கடைசி முக்கால் மணி நேரம், பரபரப்பு மற்றும் பரிதவிப்பு..

*சுதந்திரம் கிடைக்கும் காட்சி, ரயில்வே நிலையத்தில் ஆர்யா எமியை பார்க்கும் காட்சி, கடைசி படகு காட்சி என்று தொண்டை அடைத்த தருணங்கள் பல (திரும்பவும் same feelings)..

*ஜி.வி.பிரகாஷ் குமார் அசத்தலாக இசை அமைத்துள்ளார்.. ஆருயிரே பாடல் எனக்கு பிடித்தது..

*யாரையோ விட்டுட்டேனோ? ம்ம்ம் ஆர்யா.. பரிதியாவே வாழ்ந்துருக்காருப்பா மனுஷன்.. அவர் உடல் நடிக்கும் முன்பே, வாய் வசனத்தை உச்சரிக்கும் முன்பே, கண்கள் பேசிவிடுகின்றன..

*குஸ்தியின் போது வெளியில் தெரியாமல் சந்தோசப்படும் இந்திய போலீஸ், நாயகனின் தங்கை "அதெல்லாம் வேண்டாமக்கா, எங்க வண்ணான் துறைய மீட்டுக்குடுங்க போதும்" என்னும் காட்சி, ஆர்யா எமியிடம் தாலி குடுக்கும் காட்சி, தமிழ் வார்த்தைகளை வீணாக்காமல் சேர்த்து வைப்பது போல் யாரிடமும் அளந்தே பேசும் அந்த பாட்டி, என்று அடுக்கிக்கொண்டு போகும் அளவிற்கு காதலையும் சில இடங்களில் தேசப்பற்றையும் ஓட விட்டிருக்கிறார்..

சென்னை நல்ல ஊர் இல்லை என்றாலும், நல்ல படங்களின் வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும் இந்த மதராசப்பட்டினம்..